பெங்களூரு லால்பாக் பூங்காவில் கொட்டும் மழையிலும் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த பொதுமக்கள்


பெங்களூரு லால்பாக் பூங்காவில் கொட்டும் மழையிலும் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த பொதுமக்கள்
x

பெங்களூரு லால்பாக் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்கண்காட்சியை கொட்டும் மழையிலும் பொதுமக்கள் பார்த்து ரசித்ததுடன், மலர்களால் ஆன ராஜ்குமாரின் வீடு மற்றும் சிலைகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பெங்களூரு:

மலர் கண்காட்சி

பெங்களூருவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய லால்பாக் பூங்கா உள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் இங்கு ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலர்கண்காட்சி நடத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி மலர்கண்காட்சி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதனை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தொடங்கிவைத்தார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகத்தின் அடையாள சின்னம் அல்லது கர்நாடகத்தை சேர்ந்த முக்கிய பிரபலங்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு மறைந்த நடிகர் ராஜ்குமார், அவரது மகனும், மறைந்த நடிகருமான புனித் ராஜ்குமார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் மலர் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

3½ லட்சம் பூக்களால் ஆன வீடு

அதாவது பூங்காவில் உள்ள கண்ணாடிமாளிகையில் கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் தொட்டகாஜனூரில் நடிகர் ராஜ்குமாருக்கு சொந்தமான வீடு மாதிரியில் பிரமாண்ட வீடு 3½ லட்சம் பூக்களால் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் முன்பு வலதுபுறம் புனித்ராஜ்குமாரின் உருவச்சிலையும், இடதுபுறம் அவரது தந்தை ராஜ்குமாரின் சிலையும் அழகுற காட்சி தருகிறது. மேலும் அந்த வீ்ட்டை சுற்றி வண்ண, வண்ண மலர்கள் கண்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. அதுபோல் புனித்ராஜ்குமாருக்கு சொந்தமான சக்திதாமா ஆசிரமமும் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜ்குமார்-புனித்ராஜ்குமாரின் சிலைகள் மற்றும் மணல் சிற்பங்கள், ராஜ்குமார்-பர்வதம்மா, புனித்ராஜ்குமார் ஆகியோர் ஒன்றாக உள்ள சிலைகள்,, அவர்களது சிறு வயது புகைப்படங்கள், திரையுலக வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் உள்பட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அவர்களின் வாழ்க்கை குறிப்புகளும் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. கண்ணாடி மாளிகையின் வெளிப்புறம் மலர்களால் ஆன மயில், அலங்கார வளைவுகள், அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் பூமழையும் கண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் குவிந்த மக்கள்

2 ஆண்டுக்கு பிறகு கண்காட்சி நடத்தப்படுவதால் மலர்கண்காட்சி தொடங்கிய நாள் முதலே மக்கள் ஆர்வமுடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள். விடுமுறைநாளான நேற்று மக்கள் கூட்டம் லால்பாக் பூங்காவில் அலைமோதியது.

நேற்று காலை முதல் இரவு வரை அவ்வப்போது பலத்த மழையும், சாரல் மழையும் மாறிமாறி பெய்தப்படி இருந்து. இருப்பினும் கொட்டு மழையிலும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க மக்கள் குடும்பம் சகிதமாக சாரை, சாரையாக வந்து ரசித்து சென்றனர்.

1½ லட்சம் பேர் கண்டுரசித்தனர்

குறிப்பாக 3½ லட்சம் பூக்களால் உருவாக்கப்பட்டுள்ள ராஜ்குமாரின் வீடு, சக்திதாமா ஆசிரமம், ராஜ்குமார் மற்றும் புனித்ராஜ்குமார் ஆகியோரின் சிலைகளை கண்டுரசித்த இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் செல்போன்களில் செல்பி எடுத்தும், புகைப்படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.

கொட்டுமழையை பொருட்படுத்தாமல் நேற்று ஒரே நாளில் 1½ லட்சம் பேர் மலர்கண்காட்சியை கண்டு ரசித்ததாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story