விமானத்தில் கடத்திய ரூ.55½ லட்சம் தங்கம் சிக்கியது; கேரள பயணிகள் 4 பேர் கைது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.55½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பிடித்தனர். மேலும் இதுதொடர்பாக கேரள பயணிகள் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
விமானத்தில் கடத்திய ரூ.55½ லட்சம் தங்கம் சிக்கியது; கேரள பயணிகள் 4 பேர் கைது
Published on

மங்களூரு;

சர்வதேச விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் இந்த விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சுங்க வரித்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதில் சுங்க வரித்துறையினர் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கடத்தி வரும் தங்கம் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிந்து கைப்பற்றி வருகிறார்கள்.

சோதனை

அதுபோல் நேற்று முன்தினம் துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு 2 விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்க வரித்துறையினர் சோதனையிட்டனர். அப்போது ஒரு விமானத்தில் வந்திருந்த 3 பயணிகளின் நடவடிக்கையில் சுங்க வரித்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து தீவிரமான சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் 3 பேரும் செருப்புக்குள் தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் மற்றொரு விமானத்தில் ஒரு பயணியும் செருப்புக்குள் தகடுபோல் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.55 லட்சத்து 39 ஆயிரத்து 810 மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறையினர் மீட்டனர்.

பின்னர் அவர்கள் 4 பேரையும் விமான நிலைய போலீசாரிடம் சுங்க வரித்துறையினர் ஒப்படைத்தனர். அதன்பேரில் அவர்கள் 4 பேர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com