கொள்ளை நடந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு
சிக்பள்ளாப்பூரில் கொள்ளை சம்பவம் நடந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகேஷ் நேற்று பார்வையிட்டார். மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக அவர் கூறினார்.
கோலார் தங்கவயல்:-
உதவி சப்-இன்ஸ்பெக்டர்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் பெரேசந்திரா போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரது மகன் சரத் என்பவரை துப்பாக்கியால் சுட்டும், மனைவி, மருமகள் உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியும் வீட்டில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
இதுபற்றி அறிந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது அவரையும் மர்ம நபர்கள் துப்பாக்கியைக் கொண்டு முகம் மற்றும் தலைப்பகுதியில் தாக்கினர். பின்னர் அந்த மர்ம நபர்கள் தாங்கள் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் அவர்கள் வீட்டில் பூஜை அறையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி பூஜைப்பொருட்களை கொள்ளையடிக்காமல் விட்டுச் சென்றிருந்தனர்.
தனிப்படை அமைப்பு
இதுதொடர்பாக பெரேசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகேஷ், கொள்ளை சம்பவம் நடந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.38 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






