'பைரா' காட்டுயானை பிடிபட்டது
சிக்கமகளூருவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பைரா என்ற காட்டுயானையை 14 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் பாதுகாப்பு மையத்தில் விட்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு:-
யானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த காட்டுயானைகள் விளை நிலங்களை மட்டுமின்றி மனிதர்களையும் கொன்று வருகிறது. அதன்படி சிக்கமகளூரு மூடிகெரே தாலுகா உருபகே ஒசஹள்ளி கிராமத்தில் அர்ஜுன் என்பவரை காட்டுயானை ஒன்று மிதித்து கொன்றது. குந்தூர் அருகே சோபா என்ற விவசாயை யானை துரத்தில் சென்று மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தை கண்டித்து கிராமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய குமாரசாமி எம்.எல்.ஏ நேரில் வந்தார். அவரை பொதுமக்கள் துரத்தி அடித்தனர்.
மேலும் யானைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி மாநில அரசு 3 யானைகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த 3 காட்டுயானைகளை பிடிக்க வனத்துறையினர் தீவிர காட்டி வந்தனர்.
இதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 30-ந் தேதி முதல் காட்டுயானை பிடிப்பட்டது. இதையடுத்து ஒரு வாரம் கழித்து மற்றொரு காட்டுயானையை வனத்துறையினர் பிடித்தனர்.
3-வது யானை பிடிப்பட்டது
3-வது யானையான பைராவை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதற்காக வனத்துறையினர் சிக்கமகளூரு வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் முகாமிட்டு காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை உருபகே ஒசஹள்ளியை கிராமத்தில் அந்த 3-வது யானையான பைரா நடமாடியதாக கிராமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 6 கும்கி யானைகள் உதவியுடன் அதை பிடிக்க முயற்சித்தனர்.
இருப்பினும் அந்த பைரா யானை தப்பி செல்லும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் வனத்துறையினர் விடாமல் துரத்தி சென்று மயக்க ஊசி செலுத்தினர். இதில் நிலை தடுமாறிய யானை சிறிது தூரம் ஒடி சென்று விழுந்தது. பின்னர் அந்த யானையை கயிறு கட்டி கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
பின்னர் அதை சக்ரேபைலு யானைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இதனை அறிந்த கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 14 நாட்கள் இந்த யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்காக 100-க்கும் அதிகமான வனத்துறை ஊரியர்கள், அபிமன்யு தலைமையிலான 6 கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.