

மங்களூரு;
பிரவீன் நெட்டார் படுகொலை
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா அருகே நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்து இருந்தார்.
கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார்
அதன்படி நேற்று மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் தட்சிண கன்னடாவுக்கு வந்தார். அவர் பிரவீன் நெட்டார் மற்றும் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட முகமது பாசில் குறித்து விசாரணை நடத்தினார். கொலை நடந்த இடங்கள், கொலை செய்யப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள், அவர்களது குடும்ப பின்னணி, கொலைக்கான காரணம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்ருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த 2 கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். மக்களின் உயிர்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பது போலீசாரின் பொறுப்பு. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பாசிலை கொலை செய்தவர்களை கைது செய்வோம்.
2 பேர் கைது
போலீஸ் துறைக்கு சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது. சவாலை ஏற்றுக்கொண்டு சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த 21-ந் தேதி இதேபோல் மசூத் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் தொடர்புடைய 8 பேரை கொலை நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்தோம். பிரவீன் கொலை வழக்கில் இதுவரை 2 பேரை கைது செய்துள்ளோம்.
இந்த வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். போலீசாரின் கவனம், பாசில் கொலை வழக்கு மீது இருப்பதால், பிரவீன் கொலை வழக்கின் விசாரணை மந்தமாக இருப்பதாக கூறுவது தவறு. எதற்காக கொலை நடந்திருக்கும் என்று இப்போதே கூற இயலாது. அதுபற்றி அனைத்து கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அசாதாரண சூழ்நிலை
தட்சிண கன்னடா மாவட்டத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.