மதுகதே குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை; ஆய்வுக்கு பின் நீர்ப்பாசன துறை அதிகாரி பேட்டி


மதுகதே குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை; ஆய்வுக்கு பின் நீர்ப்பாசன துறை அதிகாரி பேட்டி
x

மதுகதே குளத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதுதொடர்பாக ஆய்வு நடத்திய நீர்ப்பாசன துறை அதிகாரி மஞ்சுநாத், குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

சிக்கமகளூரு;

மதுகதே குளம்

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பாபாபுடன் கிரி மலைப்பகுதியில் மதுகதே குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியாக பாபாபுடன்கிரி மலைப்பகுதி உள்ளது. இந்த குளத்தை அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாபாபுடன்கிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மதுகதே குளம் நிரம்பியது. நிரம்பி வழியும் குளத்தின் கரையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து இதுதொடர்பாக நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரி மஞ்சுநாத் நேற்று குளத்தின் கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்சரிவு

குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யலாம். குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. யாரோ மர்ம நபர்கள் குளத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறி வேண்டுமென்றே வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருப்பதுபோல் இங்கு எந்த பாதிப்பும் இல்லை. வீடியோவில் இருப்பதை யாரும் நம்ப வேண்டாம். அது வெறும் வதந்தி. குளக்கரை உடைந்துவிடும் என்று யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story