திருவனந்தபுரம் மாநகராட்சி பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடா? கடிதம் வெளியானது குறித்து மேயர் ஆர்யா ராஜேந்திரன் விளக்கம்


திருவனந்தபுரம் மாநகராட்சி பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடா? கடிதம் வெளியானது குறித்து மேயர் ஆர்யா ராஜேந்திரன் விளக்கம்
x

திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் கடிதம் எழுதியதாக புகார் எழுந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் கடிதம் எழுதியதாக புகார் எழுந்துள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு மேயர் ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது.அதில் அவர் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை மாநகராட்சி பணிக்காக சிபாரிசு செய்யும்படி கோரியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 74 மருத்துவர்கள், 66 பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் 64 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உள்பட 295 தற்காலிக பணியிடங்களுக்கு அக்கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை சிபாரிசு செய்யும்படி கோரியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் அந்த கடிதம் அனுப்பவில்லை என மறுத்துள்ள மேயர் ராஜேந்திரன் கூறியதாவது, "கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நான் திருவனந்தபுரத்தில் இல்லை. இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.

அதே வேளையில், மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பிய சர்ச்சையில் தான் மேயர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என மேயர் ஆர்யா ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.

இதனிடையே கடிதம் சர்ச்சையால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பதற்றம் வலுத்து வருகிறது. மாநகர சபையில் இன்று பாஜக மற்றும் சிபிஎம் கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இதனால் சலசலப்பு நிலவியது. இந்த மோதலில் சிபிஎம்-பாஜக கவுன்சிலர்கள் காயமடைந்தனர்.

இதற்கிடையில், யுடிஎப் கவுன்சிலர்களும் மாநகராட்சி முன்பு போராட்டம் நடத்தினர்.இளைஞர் காங்கிரஸின் பேரணியின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.


Next Story