அரவிந்த் லிம்பாவளி மீது மீண்டும் புகார் அளிக்க பெண்ணுக்கு, டி.கே.சிவக்குமார் அறிவுரை

அரவிந்த் லிம்பாவளி மீது மீண்டும் புகார் அளிக்க பெண்ணுக்கு, டி.கே.சிவக்குமார் அறிவுரை கூறி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான அரவிந்த் லிம்பாவளி, மேரி என்ற பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை திட்டவும் செய்திருந்தார். ஆனால் அரவிந்த் லிம்பாவளியை மழை பாதிப்புகளை பார்வையிட விடாமல், அவரது பணிக்கு இடையூறு செய்ததாக கூறி, மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரியை கைது செய்திருந்தார்கள். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் மேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் தான், அரவிந்த் லிம்பாவளி திட்டியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, தன்னை திட்டியது, வாக்குவாதம் செய்தது குறித்து அரவிந்த் லிம்பாவளி மீது ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் மேரி புகார் அளித்தார். அந்த புகாாின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு தேவையான அனைதது உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று காலையில் மேரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய டி.கே.சிவக்குமார், அரவிந்த் லிம்பாவளி மீது மீண்டும் போலீசில் புகார் அளிக்கும்படியும், போலீசார் வழக்குப்பதிவு செய்யாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.






