கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளும்படி முதல்-மந்திரியே அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்- எடியூரப்பா
கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளும்படி முதல்-மந்திரியே அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
துமகூரு: துமகூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சட்டசபை தேர்தலில் போட்டியிட எதற்காக தொகுதியை தேடுகிறார் என்று தெரியவில்லை. அவர் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் வேறு தொகுதியை தேட கூடாது. ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால், அங்கு மக்களுக்கான பணிகளை செய்திருந்தால், வேறு தொகுதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை இல்லை. அப்படி இருந்தும் சித்தராமையா எதற்காக வேறு தொகுதியை தேடுகிறார் என்பது புரியவில்லை.
இந்த விவகாரம் பற்றியோ, சித்தராமையாவுக்கு எதிராகவோ பேச விரும்பவில்லை. கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவுக்கு தேவேகவுடாவை அழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. ஏனெனில் சிலை திறப்பு விழாவுக்காக தனியாக அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. முதல்-மந்திரியே அனைத்து தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி சிலை திறப்பு விழாவுக்கு அழைத்துள்ளார். திறப்பு விழாவுக்கு வருகை தர முடியாத தலைவர்கள், தங்களது சொந்த பிரச்சினையை காரணம் காட்டி அரசியல் செய்ய கூடாது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.