பெங்களூருவுக்கு பிரதமர் வருகையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூருவுக்கு நேற்று பிரதமர் வருகை தந்ததால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு பயணிகள் நடந்து சென்றார்கள்.
பெங்களூரு:
வாகன ஓட்டிகள் அவதி
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூருவுக்கு வருகை தந்தார். விதானசவுதா, பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் சென்றார். இதன் காரணமாக பெங்களூரு நகரில் 14 முக்கிய சாலைகளில் காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையும், சில சாலைகளில் 10 மணி முதல் 12 மணிவரையும், பெங்களூரு விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சிட்டி ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு இருந்ததால், மைசூரு ரோடு உள்ளிட்ட மாற்று சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மாற்று சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். காலையில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் சென்றவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பரிதவித்தார்கள்.
நடந்து சென்ற பயணிகள்
குறிப்பாக கார்ப்பரேசன் சர்க்கிளில் இருந்து மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை. சிட்டி மார்க்கெட், சாந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மெஜஸ்டிக் செல்ல வந்த பயணிகள் கார்ப்பரேசன் சர்க்கிளிலேயே இறக்கி விடப்பட்டு இருந்தார்கள்.
இதன் காரணமாக கார்ப்பரேசன் சர்க்கிளில் ஆட்டோ, அரசு பஸ்களில் இருந்து இறங்கிய பயணிகள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு நேற்று காலையில் நடந்தே சென்றதை பார்க்க முடிந்தது. அதாவது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் பயணிகள் தங்களது உடைமைகளுடன் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.