பீகாரில் துயரசம்பவம்: பிளாட்பாரத்தில் தாய் இறந்ததை அறியாமல் மடியில் தூங்கிய குழந்தை...!
பிளாட்பாரத்தில் தாய் இறந்ததை அறியாமல் மடியில் குழந்தை தூங்கிய துயரசம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பாகல்பூர்,
பீகார் மாநிலம் பாகல்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சம்பவத்தன்று 5 வயது சிறுவன் அழுதபடி அங்குமிங்கும் திரிந்தான். அங்கே சிறுவனின் தாய் வெகுநேரமாக எழுந்திருக்காமல் படுத்துக்கிடந்தார். அவர் மயக்கமடைந்திருக்கலாம் என்று மற்ற பயணிகள் கவனித்தபோது அந்த பெண் பேச்சுமூச்சற்ற நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து போனது தெரியவந்தது. தாய் இறந்ததை அறியாமல் சிறுவன் அவரது மடியில் படுத்துகிடந்துள்ளான். நீண்ட நேரத்திற்கு பிறகு பசிக் கொடுமையால் அழ ஆரம்பித்துள்ளான். இதையடுத்தே மற்றவர்களின் கவனத்துக்கு இந்த சம்பவம் தெரியவந்தது.போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிண அறைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் யாரும் அவரது உடலுக்கு உரிமை கோரி வரவில்லை. இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, போலீசாரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. சிறுவன் குழந்தை பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.