விநாயகர் சிலையை கரைத்துவிட்டு டிராக்டரில் திரும்பியபோது சோகம்; மின்சாரம் தாக்கி பெண்கள் உள்பட 3 பேர் பலி


விநாயகர் சிலையை கரைத்துவிட்டு டிராக்டரில் திரும்பியபோது சோகம்;  மின்சாரம் தாக்கி பெண்கள் உள்பட 3 பேர் பலி
x

விநாயகர் சிலையை கரைத்துவிட்டு டிராக்டரில் திரும்பியபோது மின்சாரம் தாக்கி பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்கமகளூரு;

விநாயகர் சிலை ஊர்வலம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஒசஹள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் அந்த சிலையை குளத்தில் கரைக்க நேற்று முன்தினம் கிராம மக்கள் அனைவரும் ஒசஹள்ளி கிராமத்தின் அருகேயுள்ள ஒரு குளத்திற்கு டிராக்டரில் கொண்டு சென்றனர்.

டிராக்டரில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சென்று இருந்தனர். விநாயகர் சிலையை கரைத்துவிட்டு அதே டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஒசஹள்ளி அருகே வந்தபோது, அந்த பகுதியில் மின்கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டிருந்தது. இதை டிராக்டர் டிரைவர் கவனிக்கவில்லை.

மின்சாரம் தாக்கி 3 பேர் சாவு

அப்போது எதிர்பாராவிதமாக மின்கம்பி டிராக்டரில் இருந்த அலங்கார வளைவு மீது உரசியது. இதனால் டிராக்டரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அலங்கார வளைவு அருகே இருந்த 6 பேர் மீது மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கப்பட்டு 6 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். பின்னர் அவர்கள் 6 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் அவர்களில் 3 பேர் இறந்தனர். மீதமுள்ள 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீ்ட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவம் இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் சென்று விசாரணை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானதில் ராஜூ(வயது 47), ரஞ்சனா(35), பார்வதி(26) ஆகிய 3 பேர் உயிரிழந்தனா். 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சங்கீதா(37), பல்லவி(32), கவுரி(50) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் சங்கீதா, பல்லவி ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவுரி மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்தார்.


Next Story