பெங்களூரு-வாரணாசி இடையே ஆன்மிக சுற்றுலா ரெயில்
பெங்களூரு-வாரணாசி இடையே ஆன்மிக சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது.
பெங்களூரு:
கர்நாடக அரசு மற்றும் ரெயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவை இணைந்து "கர்நாடக பாரத் கவுரவ் காசி தரிசன்'' என்ற ஆன்மிக சுற்றுலா ரெயில் சேவையை தொடங்குகிறது. இந்த சுற்றுலா ரெயிலின் முதல் சேவையை பிரதமர் மோடி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். 8 நாட்கள் சுற்றுலா திட்டத்தில் வாரணாசி, அயோத்தியா, பிரயாக்ராஜ் ஆகிய புண்ணிய தலங்களுக்கு அந்த ரெயில் செல்கிறது. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அந்த ரெயில் பீருர், ஹாவேரி, உப்பள்ளி, பெலகாவி ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கும். முன்பதிவு செய்தவர்கள் அந்த ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்களில் ஏறிக்கொள்ளலாம். வாரணாசியில் துளசி மானஸ் கோவில், சங்கத் மொச்சன் ஹனுமன் கோவில், காசி விஸ்வநாத் கோவில், கங்கை ஆரத்தி ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபட அனுமதிக்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில், ஹனுமன் கர்கி, சராயு காட் ஆகிய கோவில்களுக்கு செல்லலாம். பிரயாக்ராஜ் நகரில் கங்கா, யமுனா, சங்கம், ஹனுமன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதில் பயணம் செய்ய ஒருவருக்கு கட்டணமாக ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடக அரசு மானியமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்குகிறது. அந்த மானியம் போக ரூ.15 ஆயிரம் கட்டணத்தை செலுத்த வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். அந்த ரெயிலில் பயணிகளுக்கு டீ, காபி உள்பட மூன்று நேரமும் உணவுகள் பரிமாறப்படும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.