பஞ்சாப், அரியானாவில் விவசாயிகள் ரெயில், சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு; பயணிகள் அவதி


பஞ்சாப், அரியானாவில் விவசாயிகள் ரெயில், சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு; பயணிகள் அவதி
x

மத்திய அரசு தனது வாக்குறுதிகளை மீறியதாக குற்றம்சாட்டி பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரெயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சண்டிகார்,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதால், போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

அப்போது, விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், லகிம்பூர் சம்பவத்தில் நீதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது.

ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக 31-ந் தேதி (நேற்று) 4 மணி நேர நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போராட்டம் நடந்தது. பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ரெயில்கள் ரத்து

பஞ்சாபில் பல இடங்களில் விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெரோஸ்பூர் கோட்ட நிர்வாகம், 5 ரெயில்களை ரத்து செய்தது. 8 ரெயில்களின் போக்குவரத்தை மாற்றி அமைத்தது. 2 ரெயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டது.

இதனால், பயணிகள் அவதி அடைந்தனர். குறிப்பாக, காஷ்மீரின் ஜம்முவை சேர்ந்த ஒரு குடும்பம், பஞ்சாபில் ஜலந்தரில் சிகிச்சை பெற வந்திருந்தது. சிகிச்சை முடிந்து நேற்று ஜம்மு திரும்ப வேண்டிய நிலையில், ரெயில் வராமல் கவலை அடைந்தது.

மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஒரு பெண்ணும் ரெயில் வராததால் வேதனை அடைந்தார்.

இதுபோல், விவசாயிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அரியானா

அரியானா மாநிலத்தில், ஹிசார், ஜஜ்ஜார், பகதுர்கார், டோஹனா, சோனிபட், கர்னால் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ரெயில்களையும் மறித்தனர். ஹிசாரில், 5 சுங்கச்சாவடிகளில் போராட்டம் நடத்தி, மத்திய அரசின் உருவபொம்மைகளை எரித்தனர். சோனிபட்டில் ஊர்வலமாக சென்று உருவபொம்மையை எரித்தனர்.


Next Story