இளம்பெண்ணை ஏமாற்றிய திருநங்கை கைது
பண்ட்வால் அருகே, முகநூலில் ஆண்போல் பேசி காதலித்து இளம்பெண்ணை ஏமாற்றிய திருநங்கை கைது செய்யப்பட்டார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் அருகே விட்டலா பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு, முகநூல்(பேஸ்புக்) மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது.
அப்போது அந்த வாலிபர், இளம்பெண்ணிடம் தன்னை சிவில் என்ஜினீயர் என்று அறிமுகமாகி நன்கு சாட்(குறுந்தகவல்) செய்து வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதைதொடர்ந்து 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசி வந்துள்ளனர்.
இதற்கிடையே காதல் விவகாரம் இளம்பெண்ணின் தாய்க்கு தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து அவர் தனது உறவினரும், வக்கீலுமான ஷைலஜா ராஜேஸ் என்பவரிடம் வாலிபர் குறித்து விசாரிக்கும்படி தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் அவரும், விட்டலா போலீஸ் உதவியுடன் வாலிபரின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடினர். அப்போது வாலிபரின் செல்போன் எண், உடுப்பி மாவட்டம் சங்கரநாராயணா பகுதியில் இருப்பதாக காட்டியது. இதைதொடர்ந்து போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது முகநூலில் இளம்பெண்ணிடம் பேசியது ஒரு திருநங்கை என்பது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணிடம் ஆண்போல் பேசி ஏமாற்றி காதலித்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.