மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக மதபோதகர் உள்பட 2 பேர் கைது

கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக மதபோதகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் சொஹ்னா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இந்து மத மக்களை கிறிஸ்தவ மத போதகர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம் செய்ய முயற்சித்ததாக புகார் எழுந்தது.
மதபோதகர் பாலஸ் மனீஷ் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தன்று கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கிராம மக்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த மதபோதகர் பாலஸ் மனீஷை கைது செய்தனர்.
அதேபோல், அம்மாநிலத்தின் பாலியா மாவட்டம் திதலி கிராமத்தை சேர்ந்த ராம்நிவாஸ் என்ற நபர் இந்து மதத்தை சேர்ந்த கிராம மக்கள் சிலரை நேற்று கிறிஸ்தவ மதமாற்றம் செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ராம்நிவாசை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் கட்டாய மத மாற்றம் தண்டனைக்குரிய குற்றமாகும். மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கபடும் வகையில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.