சாவர்க்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது - ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்


சாவர்க்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது - ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்
x
தினத்தந்தி 26 March 2023 6:14 PM GMT (Updated: 26 March 2023 7:09 PM GMT)

சாவர்க்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலேகாவ்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுதான் "மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை'', என கூறினார்.

இதன்மூலம் ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின. இது மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் நேற்று மராட்டிய மாநிலம் மாலேகாவில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

சாவர்க்கர் எங்களின் அடையாளம். ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில் அவரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அந்தமான் செல்லுலார் சிறையில் 14 ஆண்டுகள் கற்பனை செய்ய முடியாத சித்ரவதைகளை சாவர்க்கர் அனுபவித்தார். அவரது துன்பங்களை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். இது ஒரு வகையான தியாகமாகும்.

நமது நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றதான் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன். இந்த நேரத்தை வீணடிக்க அனுமதித்தால் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும். 2024-ம் ஆண்டு தேர்தல்தான் ஜனநாயகத்தை காக்க நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றாக பேசினார். ரூ.20 ஆயிரம் கோடி யாருக்கு சொந்தமானது என்று சரியான கேள்வியை எழுப்பினார். ஆனால் மத்திய அரசு அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

நான் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற போராடுகிறேன். என் போராட்டம் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆகவேண்டும் என்பதற்கானது அல்ல. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக்கின் 6 வயது பேத்தியை புலனாய்வு அமைப்புகள் விசாரித்தனர். லாலு பிரசாத் யாதவின் கர்ப்பிணி மருமகள் மயக்கம் அடையும் வரை விசாரிக்கப்பட்டார். ஆட்சியில் இருப்பவர்களை விமர்சித்தால் போலீசார் உங்களை தேடி வருவார்கள்.

பிரதமர் மோடி ஒன்றும் நமது இந்தியா கிடையாது. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் இதற்காகவா உயிரை கொடுத்தார்கள்? பா.ஜனதாவில் இருப்பவர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்றால் மற்ற கட்சியில் இருந்து வரும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்ப்பதை அவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடிகிறது.

எனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பறித்துவிட்டனர். ஆனால் அந்த துரோகிகளால் மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது என்று அவர் கூறினார்.


Next Story