தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில், உத்தவ் தாக்கரே மனு


தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில், உத்தவ் தாக்கரே மனு
x

தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில், உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில் சிவசேனா 2 அணியாக உடைந்துள்ளது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியினர் தங்களை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும், கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து சிவசேனாவின் இரு அணிகளும் உரிய ஆவணங்களை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. ஆவணங்கள் தாக்கல் செய்த பிறகு, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்க உள்ளது. இதனால் சிவசேனா கட்சி சின்னம் யாருக்கு செல்லும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே தரப்பு நேற்று சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. கட்சியின் பொதுச்செயலாளர் சுபாஷ் தேசாய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்கள் தரப்பு உண்மையான சிவசேனா என ஏக்நாத் ஷிண்டே அணியினர் தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ளனர். கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஏக்நாத் ஷிண்டேவின் கடிதம் மீதான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story