உமேஷ் ரெட்டியின் மரண தண்டனை ரத்து


உமேஷ் ரெட்டியின் மரண தண்டனை ரத்து
x

பெண்களை கற்பழித்து கொன்ற வழக்கில் உமேஷ் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உள்ளது.

பெங்களூரு:-

உமேஷ் ரெட்டி

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் உமேஷ் ரெட்டி. சைக்கோ கொலையாளி என்று கூறப்படும் இவர், நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார். கர்நாடகத்திலும் உமேஷ் ரெட்டியின் பாலியல் இச்சைக்கு சில பெண்கள் பலியாகி இருந்தனர். இந்த வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட உமேஷ் ரெட்டி பெலகாவி இண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் அவர் சிறையில் இருந்து தப்பி இருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து இருந்தனர். அவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு உமேஷ் ரெட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து உமேஷ் ரெட்டி தாக்கல் செய்த மனு கடந்த 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

தூக்கு தண்டனை ரத்து

இதன்பின்னர் பொது மன்னிப்பு கேட்டு ஜனாதிபதிக்கும், உமேஷ் ரெட்டி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவரது பொது மன்னிப்பு கடிதத்தை ஜனாதிபதியும் நிராகரித்து விட்டார். இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் உமேஷ் ரெட்டி மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் கடந்த 2011 முதல் இதுவரை பெலகாவி சிறையில் உமேஷ் ரெட்டி தனிமை சிறையிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் மனு மீதான இறுதி விசாரணை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்தர பட், நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், மனுதாரர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் அவருக்கு மனரீதியாக சித்ரவதை கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய மரண தண்டனை, 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. ஆனாலும் மனுதாரர் சார்பில் ஜாமீன் எதுவும் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டால் 30 ஆண்டுகளுக்கு பின்பு தான் அந்த மனு பரிசீலனை செய்யப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.


Next Story