ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்...!


ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தை சூறையாடிய  மர்ம நபர்கள்...!
x
தினத்தந்தி 21 Feb 2023 7:08 AM GMT (Updated: 21 Feb 2023 7:09 AM GMT)

வம்சி எம்.எல்.ஏ. அடிக்கடி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாராலோகேஷ் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வந்தார்.

ஆந்திரா,

திருப்பதி: ஆந்திர மாநிலம், விஜயவாடா கன்னவரம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வம்சி. இவர் ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். வம்சி எம்.எல்.ஏ. அடிக்கடி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாராலோகேஷ் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வந்தார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரெட்டி பட்டாபி, மாநில செயலாளர் சின்னா ஆகியோர் வம்சி எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து நேற்று காலை கன்னவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும் தேர்தல் பார்வையாளர் ஹரிபாபு மற்றும் பெண் தலைவர்களும் விமர்சனம் செய்து பேசியதால் ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சின்னாவின் வீட்டிற்கு போன் செய்து மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரது வீட்டிற்கு சென்று நேரில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இந்த தகவல் பரவியதால் 4 மண்டலங்களை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியினர் கன்னவரம் அலுவலகத்தில் குவிய தொடங்கினர். இந்த தகவல் வம்சி எம்.எல்.ஏ.வுக்கு தெரிவிக்கப்பட்டது.

மாலை 4.30 மணியளவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசில் புகார் அளிக்க ஊர்வலமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினர். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அந்த வழியாக வந்த வம்சி எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது தடிகளாலும் கற்களாலும் தாக்குதல் நடத்தினர். மேலும் கட்சி அலுவலகத்தில் புகுந்து மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கார்கள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டு இளைஞர் அணி செயலாளர் ஒருவரின் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்தாமல் போலீசார் தங்களது செல்போனில் நடந்த சம்பவங்களை போட்டோ வீடியோவாக பதிவு செய்தனர். கலவரம் முடியும் தருவாயில் போலீசார் ஒரு சிலரை பிடிக்க முயன்றனர். அவர்கள் போலீசாரை தாக்கியதில் சில போலீசாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காயம் அடைந்த போலீசார் மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்ளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடந்த இடத்தில் பொருட்கள் சிதறியும், கார் பைக் அடித்து நொறுக்கப்பட்டு போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முன்கூட்டியே சதி செய்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story