தேசிய கல்விக் கொள்கை சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சீர்திருத்தம் - மந்திரி ஜிதேந்திர சிங்


தேசிய கல்விக் கொள்கை சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சீர்திருத்தம் - மந்திரி ஜிதேந்திர சிங்
x

தேசிய கல்விக் கொள்கை-2020, உலகளாவிய தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை-2020, உலகளாவிய தேவைகளுக்கேற்ப இந்தியாவின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்கும் என மத்திய மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் 2022-கல்வி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:-

புதிய கல்விக் கொள்கை முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது மட்டுமல்ல. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சீர்திருத்தம். இது 21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப உள்ளது.

மாணவர்களின் பட்டப்படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், அறிவு, திறமை மற்றும் திறன் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிப்பதாகவும், மாணவர்கள் மற்றும் இளம் அறிஞர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் தனிப்பட்ட சூழல்களை பொறுத்து தங்களின் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது.

கல்வியில் உள்ள இந்த நெகிழ்வுத்தன்மை, மாணவர்களின் கற்றல் மற்றும் திறமையைப் பொறுத்து, வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு தொழில் வாய்ப்புகளை பெறுவதில் அவர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பிடும்போது, தற்போது 40 மில்லியன் இந்தியர்கள் உயர் கல்வி பயில்கின்றனர். புதிய கல்விக் கொள்கை இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் முயற்சியாகும்.

தேசிய கல்விக் கொள்கையின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களில் தொழில்முனைவோர்களை இணைப்பதற்கான வாய்ப்பு. இது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகக் குறுகிய காலத்தில் உத்வேகத்தை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

பல்வேறு அணுகுமுறைகள் மூலம் இந்தியாவின் கல்வி முறையை மாற்றி அமைப்தற்காக தேசிய கல்விக் கொள்கை தொடங்கப்பட்டது என்று பேசினார்.


Next Story