புதுச்சேரியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டி..?


புதுச்சேரியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டி..?
x

கோப்புப்படம் 

நிர்மலா சீதாராமனை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. பிரபலமான நபரை வேட்பாளராக தேர்ந்தெடுக்குமாறு முதல்-அமைச்சரும், கூட்டணி கட்சி தலைவருமான ரங்கசாமி பா.ஜனதாவுக்கு யோசனை தெரிவித்தார்.

இதையடுத்து வேட்பாளர் தேர்வில் பா.ஜனதா தீவிரம் காட்டியது. இதுதொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், சிவசங்கரன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் யார் வேட்பாளர்? என்பது இறுதி செய்யப்படாத நிலையில் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட பா.ஜனதா தயாராகி வருகிறது.

இந்தநிலையில் புதுவை முதலியார்பேட்டையில் உள்ள சுகன்யா கன்வன்சன் சென்டரில் நேற்று மாலை பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கார்டு ஓட்டலில் தங்கி இருந்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தல் நிலவரம், புதுவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது புதுவை மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story