உ.பி.: மூதாட்டிகளை குறிவைத்து பலாத்காரம் செய்யும் தொடர் கொலைகாரன்


உ.பி.:  மூதாட்டிகளை குறிவைத்து பலாத்காரம் செய்யும் தொடர் கொலைகாரன்
x

உத்தர பிரதேசத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் தொடர் கொலைகாரனை போலீசார் தேடி வருகின்றனர்.



பாராபங்கி,


உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதுபற்றி 6 தனிப்படைகள் அமைத்து போலீசார், குற்றவாளியை தேடி வருகின்றனர். அந்த மர்ம நபரின் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டு தகவல் தெரிந்தவர்கள் போலீசிடம் தெரிவிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதுவரை 3 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை நீக்கி விட்டு, வேறொரு அதிகாரி ஒருவரை பாராபங்கி எஸ்.பி. நியமித்து உள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி அயோத்தியா மாவட்டத்தில் குஷெட்டி கிராமத்தில் மாவாய் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டி, வீட்டை விட்டு ஏதோ ஒரு வேலைக்காக வெளியே சென்றுள்ளார்.

அன்று மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். போலீசில், காணவில்லை என புகார் அளித்தனர். அதற்கடுத்த நாள் வயல்வெளியில் ஒதுக்குப்புறத்தில் பெண்ணின் உடல் ஒன்றை போலீசார் மீட்டனர். நிர்வாண நிலையில் கிடந்த அந்த உடலில் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் காயங்கள் காணப்பட்டு உள்ளன.

இதுபற்றிய பிரேத பரிசோதனை முடிவில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து அந்த பெண் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதேபோன்று, பாராபங்கி மாவட்டத்தில் வயல்வெளி ஒன்றில் இருந்து 62-வது பெண்ணின் உடல் ஒன்றையும் போலீசார் மீட்டனர். இந்த 2-வது சம்பவத்திலும் அதேபோன்று மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். அந்த பெண்ணின் உடல் ஆடைகளின்றி காணப்பட்டது. பிரேத பரிசோதனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தாத்தர்ஹா கிராமத்தில் 55 வயது மூதாட்டி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரும் இதேபோன்று கொல்லப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, பாராபங்கி மற்றும் அருகேயுள்ள காவல் நிலையங்களில் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வேறு சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், பாராபங்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.


Next Story