உ.பி.: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மொத்த உயிரிழப்பு 11 ஆக உயர்வு


உ.பி.:  யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மொத்த உயிரிழப்பு 11 ஆக உயர்வு
x

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 5 ஆண்கள் மற்றும் 3 பெண்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளன.




பண்டா,



உத்தர பிரதேசத்தில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜராவுலி என்ற பகுதியை நோக்கி மர்க்கா பகுதியில் இருந்து 40 பேர் படகு ஒன்றில் கடந்த 11-ந்தேதி புறப்பட்டனர். ரக்சாபந்தனை முன்னிட்டு தங்களது உறவினர்களை சந்திப்பதற்காக அவர்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில், படகு பண்டா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் யமுனை ஆற்றில் சென்றபோது, கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் இருந்தவர்களில் பலர் ஆற்றின் ஆழம் மற்றும் நீச்சல் தெரியாததில் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், கிஷான்பூர் போலீசாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், 3 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணி இன்றும் தொடர்ந்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

இன்றைய மீட்பு பணியில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் 2 பேரின் உடல்கள் சிறிது நேரத்தில் மீட்கப்பட்டன. இதனால் மொத்தம் 8 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் 5 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. காணாமல் போன மீதமுள்ளவர்களை தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது.


Next Story