இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை 782 கோடி அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை 782 கோடி அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
யு.பி.ஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும். இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஐ பரிவர்த்தனை 700 கோடியை தாண்டியது அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறை.
ஒட்டுமொத்தமாக, 2022ஆம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022ஆம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது.