தூர்தர்ஷன் டி.வி.யில் 14-ந்தேதி முதல் ஒளிபரப்பு: புதிய தொலைக்காட்சி தொடரை அமித்ஷா அறிமுகம் செய்தார்
வரலாற்றில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய புதிய சுதந்திர போராட்ட வரலாற்று தொலைக்காட்சி தொடரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அறிமுகம் செய்தார்.
புதுடெல்லி,
வரலாற்றில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய புதிய சுதந்திர போராட்ட வரலாற்று தொலைக்காட்சி தொடரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அறிமுகம் செய்தார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை முன்னிட்டு புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்று தூர்தர்ஷன் டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது.
'சுவராஜ் பாரத சுதந்திர போராட்டத்தின் முழு கதை' என்கிற இந்த தொலைக்காட்சித் தொடர் 75 பாகங்களைக் கொண்டது. இது வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி முதல் ஒளிபரப்பாகும். அகில இந்திய வானொலியில் அனைத்து மொழிகளிலும் இதை ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய தொடரின் அறிமுக விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், அதே துறையின் இணை மந்திரி எல்.முருகன் ஆகியோரது முன்னிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதிய தொடரை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
'சுவராஜ்' புதிய தொடரில் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் முழு கதையும் விவரிக்கப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்று வெளியே பிரபலம் ஆகாத, அறியப்படாத பல வீரர்களின் சுதந்திர போராட்ட பங்களிப்பு இந்த தொடரில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் முன்னோட்ட காட்சிப்படத்தை கடந்த மாதம் 15-ந்தேதி அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.