உ.பி: சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து; 8 பேர் பலி - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல்


உ.பி: சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து; 8 பேர் பலி -  முதல்-மந்திரி  யோகி ஆதித்யநாத் இரங்கல்
x

உத்தரபிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் ஒரு சொகுசு பஸ் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. நாரயண்பூர் என்ற கிராமத்தில் அதிகாலை பஸ் நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது.

அப்போது, பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற டபுள் டக்கர்(இரண்டடுக்கு கொண்ட) பஸ் என்ஜின் பழுது காரணமாக சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த நேரத்தில் 50 பயணிகளுடன் சென்ற சொகுசு பஸ், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சொகுசு பஸ்சில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆஸ்பத்தி கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மேலும் இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தன்னுடைய டுவிட்டர் பதிவில், 'இந்த விபத்து தனக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் கவலை தருவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பதிவிட்டுள்ளார்.


Next Story