உத்தரகாண்ட் மாநிலத்தில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்


உத்தரகாண்ட் மாநிலத்தில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x

உத்தரகாண்ட் மாநிலத்தில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின்மீது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தொங்குபாலம் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எல்லா பாலங்களையும் 3 வார காலத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள பாலங்கள் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அங்கு 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக உள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் டேராடூனில் நேற்று கூறியதாவது:-

மாநிலத்தில் 36 பாலங்கள் வாகன போக்குவரத்துக்கு தகுதியற்றவை. பாவ்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 16 பாலங்கள், தகுதியற்ற பாலங்கள் ஆகும்.

தெஹ்ரியில் 8 பாலங்களும், உத்தம்சிங்நகரில் 5 பாலங்களும், அரித்துவாரில் 3 பாலங்களும், டேராடூன், பித்தோரகார், சமோலி, ருத்ரயபிரயாக் ஆகிய இடங்களில தலா ஒரு பாலமும் தகுதியற்ற நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுப்பணித்துறை அளித்த பாதுகாப்பு தணிக்கை அறிக்கையை அடுத்து, இந்தப் பாலங்களை சரி செய்ய அல்லது அவற்றுக்கு பதிலாக புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி பொதுப்பணித்துறை உயர் அதிகாரி கூறும்போது, "பயணிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற பாலங்களை மீண்டும் கட்டமைக்கவோ அல்லது புதிதாக கட்டவோ முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவித்தார்.


Next Story