இன்னும் 5 மீட்டர்தான்... சுரங்க தொழிலாளர்களை நெருங்கிய மீட்பு குழு


இன்னும் 5 மீட்டர்தான்... சுரங்க தொழிலாளர்களை நெருங்கிய மீட்பு குழு
x
தினத்தந்தி 28 Nov 2023 6:27 AM GMT (Updated: 28 Nov 2023 12:05 PM GMT)

சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து துளை போட்டு தொழிலாளர்களை நெருங்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

உத்தர்காசி,

உத்தரகாண்டில் உத்தர்காசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41 தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வரும் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. 17-வது நாளாக மீட்பு பணி தொடருகிறது. இதற்காக டெல்லி, ஜான்சியில் இருந்து நிபுணர்கள் வந்துள்ளனர்.

சுரங்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியின்போது, சுரங்கம் திடீரென இடிந்து விழுவதும், அதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதும் தொடர்ந்து வந்தது.

சுரங்கத்தின் நுழைவு பகுதி வழியே, குழாய்களை செலுத்தி அதன்மூலம் தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மொத்தமுள்ள 57 மீட்டர்கள் தொலைவை அடைவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுபற்றி முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறும்போது, இடிபாடுகளுக்கு இடையே 52 மீட்டர்கள் தொலைவை மீட்பு குழுவினர் இதுவரை கடந்துள்ளனர். 5 மீட்டர் தொலைவிலேயே அவர்கள் உள்ளனர்.

இன்றைக்குள் தொழிலாளர்களை அவர்கள் அடைந்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார். இதேபோன்று, தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உதவியாக, ஆம்புலன்சுகள் வந்து செல்ல வசதியாக சாலை பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து துளை போட்டு தொழிலாளர்களை நெருங்கும் பணியும் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story