மரத்தில் வேன் மோதல் 6 பக்தர்கள் நசுங்கி சாவு 18 பேர் படுகாயம்
ஆலமரத்தில் சரக்கு வேன் மோதிய கோர விபத்தில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தியில் உள்ள எல்லம்மாள் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பெலகாவி மாவட்டத்தில் உள்ள உலகுந்து என்ற கிராமத்தை சேர்ந்த 23 பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை உலகுந்துவில் இருந்து சவதத்திக்கு நடைபயணமாக புறப்பட்டனர்.
நள்ளிரவில் 1 மணியளவில் அவர்கள் சுஞ்சனூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேனை நிறுத்திய டிரைவர், பாதயாத்திரை சென்ற பக்தர்களிடம் குழந்தைகள் நிறைய பேர் இருப்பதால் குறைந்த வாடகையில் கொண்டு சென்று சவதத்தி கோவிலில் விடுவதாக கூறினார். இதனால் குழந்தைகள் உள்பட 23 பேரும் அந்த சரக்கு வேனில் ஏறினர்.
புறப்பட்ட 5 நிமிடத்தில் அந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரமாக இருந்த ஆலமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வேன் சுக்குநூறாக நொறுங்கி போனது. இந்த விபத்தில் சரக்கு வேனின் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் பெண்கள் ஆவர். மேலும் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.