துணை ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவு: தேச சேவையில் மீதியுள்ள பயணத்தை தொடருவேன் - வெங்கையா நாயுடு


துணை ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவு: தேச சேவையில் மீதியுள்ள பயணத்தை தொடருவேன் - வெங்கையா நாயுடு
x

துணை ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன், தேச சேவையில் இன்னும் மீதியுள்ள பயணத்தை தொடருவேன் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

புதுடெல்லி,

வெங்கையா நாயுடுவின் துணை ஜனாதிபதி பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்றவுடன், வெங்கையா நாயுடு தனது குடும்பத்துடன் ஐதராபாத்துக்கு புறப்படுகிறார். அவருக்கு டெல்லியில் தியாகராஜா மார்க்கில் 1-ம் எண் முகவரியில் உள்ள பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில், வெங்கையா நாயுடு அசோக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். ''ஒரு மரக்கன்று, 100 மகன்களுக்கு சமம் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார்.

பின்னர், நேற்று மதியம் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஊடகங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்காக எனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி கூறுகிறேன்.

துணை ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன், தேச சேவையில் இன்னும் முடிவடையாத பயணத்தை தொடருவேன். இனிவரும் நாட்களில் மக்களுடன் உரையாடுவேன். குறிப்பாக, இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் மீது கவனம் செலுத்துவேன்.

இன்னும் எனக்கு சில நிகழ்ச்சிகள் இருக்கின்றன. 2 நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது. 10-ந் தேதிக்கு பிறகு நான் துணை ஜனாதிபதி அல்ல என்று அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், துணை ஜனாதிபதியாக உங்களை அழைக்கவில்லை, வெங்கையா நாயுடுவாகத்தான் அழைத்தோம் என்று அவர்கள் கூறினர்.

முன்பு ஒருவர் எனக்கு கடிதம் எழுதியபோது, ''ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும், பதவியே இல்லாமல் இருந்தாலும் நீங்கள் செய்தியில் அடிபடுவது எப்படி?'' என்று கேள்வி விடுத்திருந்தார்.

அவரை நான் நேரில் சந்தித்தபோது, ''நான் சொல்வதில் கருத்தும், பொருளும் இருக்கும். அதை பத்திரிகைகள் அப்படியே பிரசுரிக்கின்றன. அதுதான் ரகசியம்'' என்று கூறினேன். 'ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அல்லது அதிருப்திவாதியாக இருக்க வேண்டும் அல்லது வீட்டோடு இருக்க வேண்டும்' என்ற பழமொழியில் எனக்கு நம்பிக்கை இல்லை. 12-ந் தேதியில் இருந்து எனது பயணத்தை தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story