வனப்பகுதியில் குடிசை அமைத்த கிராம மக்கள்
ஊருக்குள் நிலம் ஒதுக்காததால் வனப்பகுதியில் குடிசை அமைத்த கிராம மக்களை கண்டித்த வனத்துறையினரை எதிர்த்து போராட்டம்
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் பகுதியில் சந்தை மைதானம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 7 குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களுக்கு வீடு இல்லாததால் மைதானத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் பஞ்சாயத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சிக்கமாகரஹள்ளி கிராமத்தின் அருகே வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி நிலத்தில் குடிசை அமைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் குடிசை அமைப்பதை நிறுத்துமாறும், அரசு அனுமதியின்றி இதுபோன்று குடிசைகள் அமைக்க கூடாது எனவும் கிராமத்தினரிடம் கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்தனர்.
இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கும், கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் விரைவில் தகுந்த இடத்தில் நிலத்தை ஒதுக்கீடு செய்வார்கள் என்றும், வீடு கட்டி தருவதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பார்கள் எனவும் வனத்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.