திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றம் இன்று முதல் அமல்
இன்று முதல் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிரேக் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க நேரம் மாற்றப்பட்டது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பு முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிரேக் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க நேரம் மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நேற்று அன்னம்மையா பவனில் செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமையில் நடந்தது. அலிப்பிரியில் ஆன்மீக பூங்கா அமைக்க முதல்கட்ட பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.9.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பத்மாவதி ஓய்வு இல்ல அறைகளை பராமரிப்பதற்காக ரூ.3.80 கோடியும், தேவஸ்தான ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகங்களில் மருந்து வாங்க ரூ.2.50 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருப்பதியில் நேற்று 69,640 பேர் தரிசனம் செய்தனர். 28,649 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.