கைதிக்கு கன்னித்தன்மை பரிசோதனை... கடிந்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு


கைதிக்கு கன்னித்தன்மை பரிசோதனை... கடிந்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு
x

போலீஸ் அல்லது நீதிமன்ற காவலில் உள்ள பெண் கைதிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்வது அரசியல் சாசன விதிமீறல் என டெல்லி ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


டெல்லி ஐகோர்ட்டு வழக்கு விசாரணை ஒன்றில் அளித்த தீர்ப்பில் கூறும்போது, விசாரணையில் உள்ள, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவலில் உள்ள, போலீசாரால் பிடிக்கப்பட்ட பெண் அல்லது பெண் கைதியிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்துவது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. கண்ணியத்திற்கான உரிமை உள்பட அரசியல் சாசன பிரிவு 21-ஐ மீறும் செயலாகும் என அறிவித்து உள்ளது.

இந்த உத்தரவை நீதிபதி சுவர்ண காந்த சர்மா அறிவித்ததுடன், இதுபற்றிய தேவையான தகவலை, அனைத்து விசாரணை முகமைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சக செயலகம், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக செயலகம், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை, டெல்லி அரசு ஆகியவற்றின் வழியே அனுப்பப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய தகவலை டெல்லி நீதிமன்ற அகாடமியும் தனது பாடப்பிரிவின் உள்ளடக்கத்தில் சேர்த்து கொள்ளும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பணிமனைகளுக்கும் தெரிவிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

28 ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கன்னியாஸ்திரி செபிக்கு இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. விசாரணை கோர்ட்டு இந்த பரிசோதனையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தது. அதன்பேரில், சி.பி.ஐ. அமைப்பினரால் விசாரிக்கப்பட்டது.

எனினும், இந்த தண்டனைக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. 2008-ம் ஆண்டு தனது ஒப்புதல் இல்லாமல் இந்த பரிசோதனையை சி.பி.ஐ. அமைப்பு கட்டாயத்தின்பேரில் நடத்தியது என மனுதாரர் செபி தரப்பில் வழக்கு தாக்கலானது.

இதுதவிர, இந்த பரிசோதனை முடிவு பற்றிய தகவல், தனது ஒப்புதலின்றி, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டு உள்ளது. தொடர்புடைய கோர்ட்டில் தகவல்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே தகவல் கசிந்து உள்ளது, மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீற கூடிய செயலாகும் என வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி இளம் கன்னியாஸ்திரி அபயா (வயது 19) என்பவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு துறையும் தற்கொலை என வழக்கை முடித்து வைத்தது. பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 1993-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி கொச்சி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த விசாரணையில், இதில் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை என 3 முறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் 2007-ம் ஆண்டு மீண்டும் சி.பி.ஐ. குழு புதிய விசாரணையை தொடங்கியது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் கொலைக்கான ஆதாரங்களை அழித்தது, உடற்கூறு பரிசோதனை அறிக்கையை திருத்தியது உள்பட பல்வேறு மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்தது.

அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த விவரங்களை கண்டுபிடித்தது.

பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனை ஒரு முறை கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டார். தங்களின் தகாத உறவை அபயா வெளியே கூறி விடுவார் என்று பயந்து போன பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அபயாவை கோடாரியால் தாக்கி, கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்ற இந்த வழக்கில் பல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர். சிலர் தங்கள் சாட்சியத்தில் உறுதியாக நின்றனர்

அவர்களில், அபயாவின் ஆசிரியையான தெரசம்மா என்பவர் பல மிரட்டல்களை மீறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். தெரசம்மா அளித்த சாட்சியத்தில் இரண்டு பாதிரியார்களும் பல கன்னியாஸ்திரிகளிடத்தில் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததாக நீதிமன்றத்தில் கூறினார். அக்கம் பக்கத்தினர் அளித்த சாட்சியத்தில், இரண்டு பாதிரியார்களும் சுவர் ஏறி குதித்து கன்னியாஸ்திரிகள் வசிக்கும் பகுதிக்கு சென்றதை பார்த்துள்ளதாக தெரிவித்தனர். அதேபோல, கான்வென்டுக்கு திருட வந்து மாட்டி கொண்ட ராஜூவும் என்பவனும் விசாரணையில் சேர்க்கப்பட்டிருந்தான். நீதிமன்றத்தில் ராஜூ அளித்த சாட்சியத்தில் இரு பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகள் இருந்த பகுதிக்குள் புகுந்ததை பார்த்ததாக கூறினான்.

இந்த வழக்கில் ஆலப்புழா அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் லலிதாம்பா அளித்த சாட்சியும் முக்கியமானதாக அமைந்தது. நீதிமன்றத்தில் லலிதாம்பா அளித்த சாட்சியத்தில், செபியை கைது செய்த போலீசார் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி கன்னித்தன்மை பரிசோதனைக்காக என்னிடத்தில் அழைத்து வந்தனர்.

அப்போது, தான் கன்னித்தன்மையுடன் இருப்பது போல காட்டி கொள்வதற்காக செபி அறுவை சிகிக்சை செய்திருந்தை கண்டுபிடித்தேன் என்றும் கூறினார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கின் 2வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


Next Story