செப்டம்பர் முதல் விசாகப்பட்டினம் தலைநகராக செயல்படும் - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு


செப்டம்பர் முதல் விசாகப்பட்டினம் தலைநகராக செயல்படும் - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
x

ஆந்திராவின் நிர்வாக தலைநகராக செப்டம்பர் முதல் விசாகப்பட்டினம் செயல்படும் என ஆந்திரமுதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் அங்கு சட்டமன்றம், தலைமை செயலகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் கடந்த தேர்தலில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் ஒருசேர அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதால் சட்டமன்ற தலைநகராக அமராவதியும், நிர்வாக தலைநகராக தொழில் நகரமான விசாகப்பட்டினமும், நீதித்துறை தலைநகராக கர்நூலும் இருக்கும் என்று அறிவித்தார்.

முதல்-மந்திரிஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்புக்கு அமராவதியில் தலைநகரம் அமைக்க சுமார் 31,000 ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு வகையான போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்பட துவங்கும். நான் அங்கு குடியேற இருக்கிறேன் என்று அறிவித்தார்.

முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மாநிலத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் சேர்த்து விசாகப்பட்டினம் பொது மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

விசாகப்பட்டின மக்கள் இனிமேல் ஆளும் கட்சியினர் இங்கு நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவார்கள். இருக்கும் நிலத்தை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று புலம்பு துவங்கியுள்ளனர் என்று கூறினார்.


Next Story