கர்நாடகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


கர்நாடகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5.05 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 6.18 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5.05 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 6.18 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிசம்பர் மாதம் வரை நடந்தது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி,பெயர் திருத்தம் பணிகள் முடிவடைந்து நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பெங்களூருவில் உள்ள வார்தா பவனில் நடந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இறுதி வாக்காளர் பட்டியல்

கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 221 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து சிவாஜிநகர், சிக்பேட்டை, மகாதேவபுரா ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் இந்த பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இந்த 3 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிட்டுள்ளோம்.

இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், வாக்காளர் பெயர் பதிவு அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வாக்குச்சாவடிகளில் கிடைக்கும். இந்த வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்க்கலாம். மீதமுள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 15-ந் தேதி அறிவிக்கப்படும்.

இறந்தவர்களின் பெயர்கள்

இன்று (நேற்று) அறிவிக்கப்பட்டுள்ள இந்த இறுதி வாக்காளர் பட்டியல்படி, 221 தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 5 லட்சத்து 48 ஆயிரத்து 553 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரத்து 725 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 50 லட்சத்து 94 ஆயிரத்து 326 பேரும், பிற வாக்காளர்கள் 4 ஆயிரத்து 502 பேரும் உள்ளனர்.

221 தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்போது, ஒரே வாக்காளர்களின் பெயா் 2 இடங்களில் இருந்தது, வாக்காளர்கள் வேறு இடத்திற்கு மாறியது, இறந்தவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்கியுள்ளோம். அவ்வாறு 6 லட்சத்து 18 ஆயிரத்து 965 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக 12 லட்சத்து 31 ஆயிரத்து 540 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்து 88 ஆயிரத்து 485 வாக்காளர்களின் விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

திருநங்கைகள்

இந்த வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து ஆயிரத்து 143 இளம் வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் இளம் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேரும், இளம்பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 13 ஆயிரத்து 40 பேரும், திருநங்கை வாக்காளர்கள் 139 பேரும் உள்ளனர். ஒரு லட்சத்து 834 பாலியல் தொழில் வாக்காளர்கள் உள்ளனர். 41 ஆயிரத்து 312 திருநங்கைகள், 5 லட்சத்து 9 ஆயிரத்து 553 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு 100 சதவீதம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

17 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி 18 வயதை பூர்த்தி செய்கிறவர்களில் 25 ஆயிரத்து 299 பேர் தங்களின் பெயரை சேர்க்க கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 18 வயதை பூர்த்தி செய்யும் தேதிக்கு பிறகு இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மனோஜ்குமார் மீனா கூறினார்.

இந்த பேட்டியின்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story