வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; தேர்தல் அதிகாரி உத்தரவு


வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; தேர்தல் அதிகாரி உத்தரவு
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் தேர்தல் ஆணையம், சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த தேர்தல் ஏற்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் அஜய் பாது, செயலாளர் பி.சி.பாத்ரா ஆகியோர் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்துள்ளனர். முதல் நாள், தலைமை தேர்தல் அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் நேற்று பெங்களூருவில் உள்ள தலைமை தேர்தல் அதிகாாி அலுவலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்வது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை கமிஷனர் அஜய் பாது கூறியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின்போது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டிகளை பின்பற்ற வேண்டும். கலெக்டர்கள் அதாவது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

வீடு-வீடாக சென்று தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களின் தகவல்களை சேகரிக்கும்போது, அவற்றை கண்காணிக்க வேண்டியது அவசியம். மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட வாக்குச்சாவடிகளை தேர்ந்தெடுத்து, அதற்குரிய காரணங்களை கண்டறிய வேண்டும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, குறைந்த வாக்குகள் பதிவான தொகுதிகளை கண்டறிந்து அங்கு இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்கள் எண்ணிக்கை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் சிறப்பான முறையில் செயலாற்ற வேண்டும். இதுவரை அதிகாரிகள் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். இது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story