ரூ.1 கோடி தருகிறோம்; நாட்டை விட்டு போ: மந்திரி மீது பாலியல் புகார் அளித்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல்


ரூ.1 கோடி தருகிறோம்; நாட்டை விட்டு போ: மந்திரி மீது பாலியல் புகார் அளித்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல்
x

ரூ.1 கோடி தருகிறோம், நாட்டை விட்டு போ என அரியானா மந்திரி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.



சாகர்,


அரியானா மாநில விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார்.

இதுபற்றி அளித்த புகாரில், விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார். அதில், எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன். அங்கு சென்றபோது, மந்திரி என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் என்னை அவரது வீட்டில் இருந்த ஓர் அறைக்கு அழைத்து சென்றார்.

என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார். அவர் உன்னை முதல் முறையாக பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என கூறினார். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று கூறினார்.

அவர் என் மீது வைத்த கையை தட்டிவிட்டேன். அவர் என் டி-ஷர்ட்டை கிழித்துவிட்டார். நான் அழுது கொண்டே இருந்தேன், உதவிக்காக சத்தம் போட்டேன். அவருடைய ஊழியர்கள் அனைவரும் இருந்தபோதிலும், யாரும் எனக்கு உதவவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

அரியானா பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில், 354, 354ஏ, 354பி, 342, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள போலீஸ் நிலையம் செக்டார் 26-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என நிராகரித்த விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங், முதல் மந்திரி மனோகர் லால் கட்டாரிடம் தனது விளையாட்டு இலாகாவை ஒப்படைத்ததாக கூறினார். எனினும் அவர் மந்திரி சபையில் இருந்து விலகவில்லை.

ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் மற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களிடம் எப்படி தவறாக நடந்து கொள்கிறார் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று புகார் அளித்த பெண் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பற்றி செய்தியாளர்களிடம் பெண் பயிற்சியாளர் பேசும்போது, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. முழு விவரங்களையும் விரிவாக குழுவிடம் அளித்துள்ளேன்.

அரியானா முதல்-மந்திரி விசாரணையில் தாக்கம் ஏற்படுத்த முயல்கிறார். அவரது பேட்டியை கேட்டேன். சந்தீப் சிங்கிற்கு ஆதரவாக பேசுகிறார். சண்டிகார் போலீசார் எந்த நெருக்கடியும் அளிக்கவில்லை.

ஆனால், அரியானா போலீசார் என் மீது அழுத்தம் கொடுக்கின்றனர். எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தபடி உள்ளன. எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் போ. மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி தருகிறோம் என மிரட்டல் விடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அரியானா உள்துறை மந்திரி அனில் விஜ் தங்கியுள்ள, அம்பாலாவில் உள்ள அவரது இல்லத்தில் தனது தந்தையுடன் சென்று பெண் பயிற்சியாளர் சந்தித்து பேசி உள்ளார்.

இந்த வழக்கில் மந்திரி சந்தீப் கைது செய்யப்பட வில்லை. போலீசார் விசாரணையும் நடத்தவில்லை. ஆனால், 4 முறை பெண் பயிற்சியாளரை அழைத்து விசாரணை நடத்தி விட்டனர் என அவரது வழக்கறிஞர் திபான்சு பன்சால் கூறியுள்ளார்.


Next Story