ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பா...? அகிலேஷ் யாதவ் மறுப்பு


ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பா...? அகிலேஷ் யாதவ் மறுப்பு
x

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை, எங்கள் கட்சியின் சித்தாந்தம் வேறு என அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 3ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. இந்த யாத்திரை டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்குள் செல்ல இருக்கிறது. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை உத்தரப் பிரதேசத்திற்குள் வரும்போது அதில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதா என அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அகிலேஷ் யாதவ், ''தொலைபேசி மூலமாக உங்களுக்கு அழைப்பு வந்திருந்தால் அதை எனக்கு அனுப்புங்கள். எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. எங்கள் கட்சியின் சிந்தாந்தம் (கொள்கை) வேறு அவர்களின் கொள்கை வேறு. ஆனால், பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான் என்றார்.


Next Story