சிபிஐ சோதனைக்கு பயப்பட மாட்டோம் - டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் அவர் பேசியதாவது:- ''கடவுள் நம்முடன் இருக்கிறார் , இது போன்ற சோதனைகளால் கட்சி பயப்படாது. உலகின் சிறந்த கல்வி அமைச்சராக மனிஷ் சிசோடியா இன்று அறிவிக்கப்பட்டார். ஆனால் சி.பி.ஐ அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்துகின்றனர். நியூயார்க் டைம்சின் முதல் பக்கத்தில் இடம்பெறுவதும், டெல்லியில் கல்வி புரட்சியை கொண்டு வருவதும் எளிதானது அல்ல.
இது முதல் ரெய்டு அல்ல. கடந்த 7 ஆண்டுகளில், மணீஷ் சிசோடியா மீது பலமுறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அவர் மீது பல பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. என் மீதும், சத்யேந்தர் ஜெயின் மீதும், கைலாஷ் கெலாட் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டன. ஆனால் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சோதனையிலும் எதுவும் அவர்களுக்கு கிடைக்காது.
சிபிஐ தனது வேலையை செய்கிறது, இதனால் பயப்பட தேவையில்லை. சி.பி.ஐ.யை அதன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும், எங்களை தொந்தரவு செய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வரும் ஆனால் வேலை நிற்காது'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.