ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டவர்கள் தேசப்பக்தர்களா?; முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி


ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டவர்கள் தேசப்பக்தர்களா?; முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி
x

ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டவர்கள் தேசப்பக்தர்களா? என்று முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.

மங்களூரு;


போராட்ட குரல்களை ஒடுக்க..

மங்களூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவின் அடக்கு முறைக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இதுபோன்ற போராட்ட குரல்களை ஒடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. முன்னாள் முதல்-மந்திரிக்கே கர்நாடகத்தில் பாதுகாப்பு இல்லை. மாநில அரசின் பிடியில் போலீஸ் துறை உள்ளது.

அனுமதியுடன் நிறுவப்பட்ட பேனரை வலுக்கட்டாயமாக அகற்ற யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அது நல்ல நோக்கத்துடன் நிறுவப்பட வேண்டும். எனது தொகுதியில் பேனர் வைத்தபோது யாரும் அதனை அகற்றும்படி கூறவில்லை.

யார் தேசப்பக்தர்கள்?

அரசு விளம்பரத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேருவின் படத்தை தவிர்க்க என்ன காரணம்?. என்ன மாதிரியான செய்தியை அரசு மக்களுக்கு சொல்ல விரும்புகிறது?. மாநில மக்களுக்கு அமைதி தேவை என்றால் பா.ஜனதா அரசை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

அடுத்த ஆண்டு (2023) நடக்கும் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என தெரிந்ததால் பா.ஜனதாவினர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இதுபோன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள்.

சாவர்க்கர் மீது காங்கிரசுக்கு சிந்தாந்த வேறுபாடுகள் உள்ளன. அவர் சுதந்திர போராட்ட வீரர் இல்லை என நாங்கள் கூறவில்லை. ஆனால் 1924-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்வு கூட இல்லை.

இந்திய சுதந்திரத்துக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் உண்மையான தேசப்பக்தர்களா? அல்லது தங்களை விடுவிக்க கோரி ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டவர்கள் தேசப்பக்தர்களா?.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story