மேற்கு வங்காளம்: எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் பிரசவ வலி; பெட்டியிலேயே பிறந்த குழந்தை
மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தபோது, கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டு பெட்டியிலேயே குழந்தை பிறந்து உள்ளது.
புர்த்வான்,
மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் ரூபின் மண்டி. இவரது மனைவி தெரசா ஹன்ஸ்டா. இந்த தம்பதி வேலை தேடி கேரளா சென்று உள்ளது.
போன இடத்தில் தெரசா கர்ப்பிணியாகி உள்ளார். இதனால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவது என முடிவு செய்து உள்ளனர். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து சில்சார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்து உள்ளனர்.
இந்நிலையில், புர்த்வான் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து கொண்டிருந்தபோது, தெரசாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, எஸ்-12 பெட்டிக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனே சென்றனர்.
ரெயில் பெட்டியிலேயே குழந்தை பிறந்து உள்ளது. இதன்பின் தாய் மற்றும் சேய் உடல் நலமுடன் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. தக்க சமயத்தில் மனிதநேய அடிப்படையில் உதவி புரிந்ததற்காக அந்த குடும்பத்தினர் ரெயில்வே துறைக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.