புதிய பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் கருத்து


புதிய பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் கருத்து
x
தினத்தந்தி 17 Dec 2022 4:00 AM IST (Updated: 17 Dec 2022 4:00 AM IST)
t-max-icont-min-icon

புதிய பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.) 95-வது ஆண்டு மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது.

தொடக்க விழாவில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

உற்பத்தி துறை மீது இந்தியா கவனம் செலுத்தக்கூடாது, அதற்கு பதிலாக சேவைத்துறையில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நமக்கு யோசனை சொல்லப்படுகிறது. ஆனால், சேவை துறையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதுடன், உற்பத்தி துறையை மேலும் வலுப்படுத்துவது அவசியம்.

அதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த கண்டுபிடிப்புகளை தொழில்துறையினர் உன்னிப்பாக கவனித்துவர ேவண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய ஆற்றலில் இருந்து தொழில்துறை பலன் அடையலாம்.

நீண்டகாலமாக நிகழ்ந்து வரும் பொருளாதார மந்தநிலை, மேலைநாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போதிலும், வேறு நாடுகளுக்கு இடம்பெயர நினைத்துக் கொண்டிருக்கிற முதலீடுகள், உங்களைத் தேடி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு இழுக்க தொழில்துறையினர் வியூகம் வகுக்க வேண்டும்.

உலகம் தூய்மையான எரிசக்தியை நோக்கி இடம்பெயர்ந்து வருவதால், வளர்ந்த நாடுகள் உங்கள் மீது அதிக வரி விதிக்கக்கூடும். ஜி20 மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகளை விளம்பரப்படுத்துவோம்.

இந்தியாவில், 14 கோடி நடுத்தர வருவாய் குடும்பங்களும், 1 கோடியே 40 லட்சம் உயர் வருவாய் குடும்பங்களும் அதிகரிக்கும். இதனால், பொருட்களின் தேவை அதிகரிக்கும்.

வரும் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டுகளின் ஆன்மாவை பின்பற்றியே இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வதாக இருக்கும். 2047-ம் ஆண்டில், மிகவும் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது குழந்தைகள் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story