சப்-இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தியதில் அப்பாவி விவசாயிக்கு கால் எலும்புமுறிவு
சப்-இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தியதில் அப்பாவி விவசாயிக்கு கால் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.
பல்லாரி: கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் கம்பளி தாலுகா குருகோடு அருகே கூல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நூர்ஜகான். இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக கூல்லூர் கிராமத்தில் ஓடும் கால்வாயில் குதித்து நூர்ஜகான் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த குருகோடு போலீசார் நூர்ஜகான் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூல்லூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் நூர்ஜகான் உடலை மீட்கும் பணியை வேடிக்கை பார்க்க கூடினர்.
இதனால் கூட்டத்தை கலைக்க சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டா தடியடி நடத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த விவசாயியான ஈரண்ணா என்பவர் தனது விவசாய நிலத்திற்கு கால்வாய் வழியாக தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டா, ஈரண்ணாவின் காலில் லத்தியால் சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதில் ஈரண்ணாவின் கால் எலும்பு முறிந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டாவின் நடவடிக்கையை கண்டித்து பல்லாரி-சிருகுப்பா சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.