காங்கிரஸ் புதிய தலைவர் யார்?: அக்டோபர் 17-ந் தேதி தேர்தல்


காங்கிரஸ் புதிய தலைவர் யார்?: அக்டோபர் 17-ந் தேதி தேர்தல்
x

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

அதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இடைக்கால தலைவர்

பின்னர், சோனியாகாந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். கட்சிக்கு முழுநேர தலைவர் உள்பட உட்கட்சி தேர்தலை நடத்துமாறு குலாம்நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி-23 குழு, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சோனியாகாந்தி, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலக முன்வந்தார். இருப்பினும், காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக்கொண்டதால் பதவியில் நீடித்தார்.

பாதயாத்திரையால் தாமதம்

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காரிய கமிட்டி அறிவித்தது. வட்டார குழு, மாவட்ட தலைவர், மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல், இந்த ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 7-ந் தேதி பாத யாத்திரையை தொடங்குகிறது. அதற்கான பணிகளை கவனிக்க வேண்டி இருப்பதால், தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காரிய கமிட்டி

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான சரியான தேதியை முடிவு செய்ய காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியாகாந்தி, காணொலி காட்சி மூலம் தலைமை தாங்கினார். அவருடன் சென்றுள்ள ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரும் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா, காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் தேதி

கூட்டத்தில், தலைவர் தேர்தலுக்கான கால அட்டவணை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள்.

ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் கால அட்டவணைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கே.சி.வேணுகோபால் கூறினார்.

பாதயாத்திரை செல்பவர்கள் ஓட்டுப்போட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கே.சி.வேணுகோபால் கூறினார்.

குழப்பம் நீடிப்பு

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு ராகுல்காந்தியை கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என்று அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால், அப்பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருகிறார்.

அசோக் கெலாட்டை தலைவர் ஆக்க முயற்சி நடப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை அசோக் கெலாட் மறுத்துள்ளார். இதனால் குழப்பம் நீடிக்கிறது.

கபில் சிபல், அஸ்வனி குமார் ஆகியோரை தொடர்ந்து குலாம்நபி ஆசாத்தும் விலகிய நிலையில் இந்த தேர்தல் நடக்கிறது.

கடைசி தேர்தல்

கடைசியாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, கடந்த 2000-ம் ஆண்டு நடந்தது. அப்போது, ஜிதின் பிரசாதாவை சோனியாகாந்தி தோற்கடித்தார். காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் நீடிப்பவர் சோனியாகாந்தி ஆவார்.

ராகுல்காந்தி பதவி வகித்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை நீங்கலாக, 1998-ம் ஆண்டில் இருந்து சோனியாகாந்தி தலைவராக இருந்து வருகிறார்.


Next Story