இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதியா? - மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்


இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதியா? - மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்
x

இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. விடுத்த கோரிக்கைக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

இரு சக்கர வாகனம் என்பது இருவர் பயணிக்கத்தான்.

ஆனால் இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையையும் சேர்த்து 3 பேர் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அண்டை மாநிலமான கேரளாவில் பலராலும் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகனச்சட்டத்தைத் திருத்தலாமா என்று கூட கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு எண்ணியது.

எம்.பி.யின் கோரிக்கை

இது தொடர்பாக கடந்த மாதம் 1-ந் தேதி, மத்திய சாலைப்போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. இளமாறம் கரீம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார்.

வாகன ஓட்டி உள்ளிட்ட 3 பேரும் பாதுகாப்பு அம்சங்களுடன் (ஹெல்மெட்) இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். குறிப்பாக, "நாட்டில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். எல்லோராலும் கார் வாங்க முடியாது. எனவே இரு சக்கர வாகனங்களில் 3 பேர் செல்ல அனுமதிக்கலாம்" என வலியுறுத்தி இருந்தார்.

நிராகரிப்பு

ஆனால் மத்திய மந்திரி நிதின் கட்காரி அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவர் இளமாறம் கரீமுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1998-ன் கீழ், இரு சக்கர வாகனம் ஓட்டுகிறவர், தனது வாகனத்தில் மேலும் ஒரு நபருக்கு மேல் ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை.

எனவே வாகன ஓட்டியின் பாதுகாப்பு அம்சத்தின் அடிப்படையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்கிறவர், தனது வாகனத்தில் ஒருவருக்கும் மேலானவரை ஏற்றிச்செல்ல அனுமதிப்பது புத்திசாலித்தனம் அல்ல. உலகமெங்கும் இரு சக்கர வாகனங்கள் 2 பேர் மட்டுமே பயணிக்க ஏற்ற விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்படுகின்றன என்று அவர் கூறி உள்ளார்.


Next Story