ராகுல்காந்தி நடைபயணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இனிப்பு கடை வாசலில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடிதம் எழுதியவர்கள் யார்? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது புரளி என்று சந்தேகிக்ப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விரைவில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் யாத்திரையை தொடங்க உள்ள நிலையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.