26 ஆண்டுகளாக விரல்கள் இல்லாத கையுடன் தேசிய கொடி ஏற்றும் ஊழியர்
26 ஆண்டுகளாக விரல்கள் இல்லாத கையுடன் தேசிய கொடி ஏற்றும் ஊழியர்
பெங்களூரு: பெங்களூரு விதான சவுதாவில் கடந்த 26 ஆண்டுகளாக விரல்கள் இல்லாத கையுடன் தேசிய கொடியை ஏற்றி, இறக்கும் வேலையில் ஊழியர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
விரல்கள் இல்லாத கையுடன்...
நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின பவள விழாவை மத்திய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்காக 13-ந் தேதியில் (அதாவது நேற்று) முதல் நாளை வரை 3 நாட்கள் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நேற்று தங்களது வீடுகளில் அரசியல் கட்சியினர் உள்பட அனைவரும் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.
பெங்களூரு உள்பட கர்நாடகத்திலும் அரசு அலுவலகங்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள், வீடுகள் என பார்க்கும் இடமெல்லாம் தேசிய கொடிகள் பறக்கிறது. அதுபோல், பெங்களூரு விதான சவுதா கட்டிடத்திலும் தேசிய கொடி பறக்கிறது. இந்த தேசிய கொடியை தினமும் ஏற்றி, இறக்குபவர் வலது கையில் விரல்கள் இல்லாத ஒரு ஊழியர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது கடந்த 26 ஆண்டுகளாக பெங்களூரு விதானசவுதாவில் விரல்கள் இல்லாத கையுடன் தான் டி பிரிவு ஊழியரான அந்தோணி தாஸ் என்பவர் தேசிய கொடி ஏற்றி வருகிறார்.
26 ஆண்டாக தேசிய கொடி ஏற்றுகிறார்
விதானசவுதாவில் தினமும் காலையில் சூரிய உதயத்தின் போது அந்தோணி தாஸ் தேசிய கொடியை ஏற்றுவார். பின்னர் மாலையில் சூரியன் மறைந்த பின்பு தேசிய கொடியை இறக்குவது தான் அவரது பணியாகும். இதுதவிர ஏதேனும் தலைவர்கள் உயிர் இழந்தால், பாதி கம்பத்தில் தேசிய கொடியை பறக்க வைப்பதும் அந்தோணி தாசின் வேலையாக உள்ளது. விதான சவுதாவில் உள்ள ஜன்னல் கதவுகள், பிற கதவுகளை மூடுவது, திறப்பதும் அவரது வேலையாக உள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து 26 ஆண்டுகளாக விதான சவுதாவில் உரிய மரியாதையுடன் தேசிய கொடியை தினமும் ஏற்றுவது, இறக்குவது, அந்த கொடியை விதிமுறைகள் படி மடித்து வைக்கும் வேலையில் அந்தோணி தாஸ் ஈடுபட்டு வருகிறார். அதுவும் வலது கையில் விரல்கள் இல்லாமல் தேசிய கொடியை ஏற்றி, இறக்குவது தனிச் சிறப்பாகும்.
தினமும் தேசிய விழா
இதுபற்றி அந்தோணி தாஸ் கூறுகையில், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மக்கள் மகிழ்ச்சி அடைவாா்கள். நான் தினமும் தேசிய கொடியை ஏற்றி வைப்பதால் பெருமைப்பட்டு கொள்கிறேன்.
இந்த பணி எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரமாக நினைக்கிறேன். விதான சவுதாவில் தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது, நான் செய்த புண்ணியமாகும். எப்போது தேசிய கொடியை ஏற்ற வேண்டும், எப்போது இறக்க வேண்டும், எப்படி தேசிய கொடியை மடித்து வைக்க வேண்டும் என்ற விதிமுறைகளை நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுரவ ஊதியம் ஒரு ரூபாயில் இருந்து ரூ.50 ஆனது
பெங்களூரு விதான சவுதாவில் தினமும் தேசிய கொடியை ஏற்றி, இறக்கும் பணியில் கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து ஈடுபட்டு வரும் அந்தோணி தாசின் வலது கைவிரல்கள் விபத்தில் துண்டாகி இருந்தது.
ஆனாலும் கடந்த 26 ஆண்டுகளாக அவர் தேசிய கொடி ஏற்றி வருகிறார். 1996-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக முதல் முறையாக அந்தோணி தாசுக்கு கவுரவ ஊதியமாக ரூ.1 வழங்கப்பட்டது. அது படிபடிப்பாக உயர்ந்து, தற்போது அவருக்கு ரூ.50 கவுரவ ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.