அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை


அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கனடாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த பெண் ஒருவர் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தலகட்டாபுரா:-

கனடாவில் இருந்து...

பெங்களூருவை சேர்ந்தவர் சரிஸ்மா(வயது 40). இவர் பணி காரணமாக கனடாவுக்கு குடும்பத்துடன் சென்றார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு புறநகர் தலகட்டாபுரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உறவினர் வீட்டிற்கு அவர் வந்தார். இதற்கிடையே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தனது குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் உடனடியாக தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் குடியிருப்புக்கு வந்து பார்வையிட்டனர். மேலும், சரிஸ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சரிஸ்மா, கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், அவர் நேற்று மட்டும் 2 முறை தற்கொலைக்கு முயன்றதும், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து மீட்டதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக? அவர் தற்கொலை செய்துகொண்டாரா?, உடல் நலக்குறைவு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவரது உறவினரிடம் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story