'ஹோம் டெலிவரி' ஆசையில் ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்து ரூ. 2 லட்சம் இழந்த பெண் அதிகாரி
மதுபானம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை நம்பி ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்த பெண் அதிகாரி லட்ச கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை பொருளாதாரத்துறை பெண் அதிகாரி ரீனா ஆல்பர்ட். இவர் கடந்த 4-ம் தேதி வீட்டிற்கே ஹோம் டெலிவரி மூலம் மதுபானம் கிடைக்குமான என கூகுள் தளத்தில் தேடியுள்ளார். அப்போது, அந்த தளத்தில் ஆன்லைனின் மதுபானம் ஹோம் டெலிவரி செய்யப்படுவது தொடர்பாக ஒரு நபரின் செல்போன் எண் கிடைத்துள்ளது.
அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்ட பெண் அதிகாரி ரீனா தனக்கு தேவையான மதுபானம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர் மதுபானத்திற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தும்படி 'லிங்க்' ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதை நம்பிய ரீனா அந்த நபர் அனுப்பிய லிங்க் மூலம் மதுபானத்திற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் ரீனாவின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பண திருடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அந்த நபர் ரீனாவை தொடர்பு கொள்ளவில்லை, ரீனா ஆர்டர் செய்த மதுபானமும் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ரீனா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ரீனாவை ஏமாற்றிய சைபர் திருடர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.